நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 11th September 2019 10:17 AM | Last Updated : 11th September 2019 10:17 AM | அ+அ அ- |

தருமபுரி நகரில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனர்.
தருமபுரி நகராட்சி ஆணையர் ரா. மகேஸ்வரி மற்றும் நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 21 கடைகளில் இருந்து, தடை செய்யப்பட்ட 1,250 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலித்த அதிகாரிகள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இதுபோன்ற திடீர் சோதனை தருமபுரி நகராட்சிப் பகுதியில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - ஐ மதிக்காமல், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் தெருவில் குப்பைகளைக் கொட்டியதற்காக தருமபுரி - சேலம் நெடுஞ்சாலையில் பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமணம் மண்டப நிர்வாகத்துக்கு அதிகாரிகள் குழுவினர் ரூ.2,000 அபராதம் விதித்தனர்.
பர்கூரில்... பர்கூரில் தடை செய்யப்பட்ட 31 கிலோ நெகிழி பொருள்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் துணை ஆட்சியர் (பயிற்சி) சுகந்தி தலைமையிலான அரசு அலுவலர்கள், தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, பர்கூரில் உள்ள துணிக் கடைகள், இறைச்சிக் கடைகள், தள்ளுவண்டிக் கடைகள், உணவகங்கள், இனிப்பகங்களில் மேற்கொண்ட திடீர் ஆய்வில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அவற்றைப் பறிமுதல் செய்தனர். மொத்தம் 31 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து, நெகிழிப் பயன்பாடு குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன், தலைமை எழுத்தர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.