தருமபுரியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், 1,370 அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன.
தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில், ரூ.1.37 கோடி மதிப்பில் 1,370 அங்கன்வாடி மையங்களுக்கு செல்லிடப்பேசிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்லிடப் பேசிகள் வழங்கி பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் 1,333 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில், 1084 முதன்மை மையங்கள், 249 குறு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 37 மேற்பார்வையாளர்கள் நிலை -1 மற்றும் நிலை - 2 ஆகியோருக்கும் சேர்த்து மொத்தம் 1,370 செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 8.5 கிலோ கொண்ட 11 வகையான பதிவேடுகளை தற்போது கையாண்டு வருகின்றனர்.
செல்லிடப்பேசி மூலம் இவை எளிதில் கையாள முடியும். மேலும், இந்த செல்லிடப் பேசி வழியாக இணை உணவு, தடுப்பூசி, மதிய உணவு மற்றும் முன்பருவக் கல்வி ஆகிய சேவைகளை எளிதில் வழங்க இயலும். பயனாளிக்கு வழங்கும் ஊட்டச் சத்து மற்றும் கல்வி எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் காணொலிக் காட்சி வாயிலாகவும் விளக்க முடியும். சிறப்புக் கவனம் தேவைப்படும் பயனாளிகளை எளிதாகக் கண்டறிந்து தொடர் கண்காணிப்பு கொடுப்பதற்கும், குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தைப் பொறுத்து எடை குறைவான குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு போதிய பராமரிப்பு வழங்குவதற்கும் இவை உதவும் என்றார். இனைத் தொடர்ந்து சிறந்த 3 அங்கன்வாடி பணியாளர்களுக்கு தலா ரூ.10,000 பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கொழு, கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற 3 குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கு.நாகலட்சுமி, காரிமங்கலம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.