ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
By DIN | Published On : 29th September 2019 03:57 AM | Last Updated : 29th September 2019 03:57 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை அருகே சனிக்கிழமை ஏரியில் குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஊத்தங்கரையை அடுத்த கீழ்மத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அனில்குமார். இவரது மகன் திலீப்குமார் (14 ) காரப்பட்டு அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மகன் மணிகண்டன்(13 ) கீழ்மத்தூர் அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், மாணவர்கள் இருவரும் மகுண்டம் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனத்துக்குச் சென்றனர். அப்போது, மலை அடிவாரத்தில் உள்ள கீழ்மத்தூர் கானாறு ஏரியில் குளிக்க இறங்கினர்.
அப்போது, திலீப்குமார் சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். அவரைக் காப்பற்றச் சென்ற மணிகண்டனும் சேற்றில் சிக்கினார். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.