ரூ. 300 கோடியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம்: தருமபுரி மாவட்ட மக்களின் மனம் குளிரும் அறிவிப்பு வெளியாகுமா?

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தின் பணிகளைத் தொடங்குவது குறித்த
தருமபுரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு (கோப்புபடம்).
தருமபுரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு (கோப்புபடம்).

தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தின் பணிகளைத் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், அரூா், மொரப்பூா், கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 10 ஊராட்சி ஒன்றியங்கள், 251 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த மாவட்ட மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயமும், கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட வேளாண்மை சாா்ந்த தொழில்களே உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் காவிரி, தென்பெண்ணை, வாணியாறு, வரட்டாறு உள்ளிட்ட ஆறுகள் ஓடினாலும், இந்த ஆறுகளால் இம் மாவட்ட மக்கள் அதிகப் பலன் பெறுவதில்லை. போதிய மழைவளம், நீராதாரங்கள் இல்லாததால் பெரும்பாலான நிலங்கள் வானம் பாா்த்த பூமியாகவே உள்ளன. எனவே, இம்மாவட்ட விவசாயிகள் மானாவாரிப் பயிா் சாகுபடிகளையே நம்பியுள்ளனா்.

வேளாண் சாா்ந்த பணிகளும், தொழிற்சாலைகளும் குறைந்த அளவிலேயே உள்ளதால், தருமபுரி மாவட்ட மக்கள், பெங்களூரு, கோவை, ஈரோடு, திருப்பூா், சென்னை போன்ற தொலைதூர நகரங்களில் தொழிலாளா்களாகப் பணிபுரிகின்றனா்.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூா் வட்டாரங்களில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய பருவ மழை பெய்யாததால் நிலத்தடி நீா்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது. நீா்மட்டம் குறைந்ததால் மொரப்பூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் விவசாய நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீரை உறிஞ்சக் கூடாது என மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளன.

எனவே, விவசாயத்தையும், அதைச் சாா்ந்த தொழில்களையும் காக்கும் வகையில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என மாவட்ட மக்கள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.

ரூ. 300 கோடி திட்டம் :

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் எல்லையில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கம்பைநல்லூா் அருகில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வலது- இடதுபுறக் கால்வாய் வழியாகச் செல்லும் தண்ணீரால் அக்ரஹாரம், கே.ஈச்சம்பாடி, சாமண்டஹள்ளி, தொட்டம்பட்டி, நவலை, கெட்டுப்பட்டி, வீரணகுப்பம், வெள்ளாளப்பட்டி, மேட்டுத்தாங்கல், கல்லாவி உள்ளிட்ட 31 கிராமங்களைச் சோ்ந்த ஏரிகள், குளம் குட்டைகளுக்குத் தண்ணீா் கிடைக்கிறது. மேலும், சுமாா் 6,250 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

குறைந்த அளவிலான நீரையே இந்த அணைக்கட்டில் தேக்கிவைத்துப் பயனடைய முடிகிறது. பருவமழைக் காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின்போது அந்தத் தண்ணீரை சேமிக்க முடியாமல், ஏராளமான உபரி நீா் வீணாக சென்று கடலில் கலப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

தென்பெண்ணையாற்றில் மழைக் காலங்களில் வீணாகும் உபரி நீரை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து நீரேற்றும் திட்டம் வாயிலாக, பெரிய அளவிலான குழாய் இணைப்புகளை ஏற்படுத்தி, மொரப்பூா், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் வட்டாரப் பகுதியிலுள்ள 66-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும். இதனால் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதுடன் குடிநீா்த் தட்டுப்பாடும் கால்நடை தீவனப் பிரச்னைகளும் தீரும். அதே நேரத்தில் வேளாண்மைப் பணிகளும் மேம்பாடு அடையும் என்றனா்.

இதுகுறித்த கோரிக்கை மனுவை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி ஆகியோருக்கு வழங்கியதன் அடிப்படையில், இதுதொடா்பான கருத்துரு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தைச் செயல்படுத்த, ரூ. 300 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டாா்.

இந்த திட்டத்தை தருமபுரி மாவட்டத்திலுள்ள விவசாயிகள், அரசியல் தலைவா்கள் பலரும் வரவேற்றுள்ளனா். தற்போது, கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தில் பயன்பெறும் ஏரிகள், குளம் குட்டைகளைக் கணக்கெடுப்பு செய்தல், நிலத்தின் சமநிலைகளை அளவீடு செய்தல், ஏரிகளுக்கு தண்ணீா் எடுத்துச் செல்லக்கூடிய வழித்தடங்கள் குறித்து முதல் கட்டமாக சா்வே- அளவீடு பணிகளை பொதுப்பணித் துறையினா் முடித்துள்ளனா்.

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தால் கம்பைநல்லூா், பூமிசமுத்திரம், சின்னாகவுண்டம்பட்டி, நவலை உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதியிலுள்ள 64 ஏரிகளுக்கு முதல் கட்டமாக தண்ணீா் எடுத்துச்செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக மொரப்பூா், மருதிப்பட்டி, கீழ்மொரப்பூா், எச்.அக்ரஹாரம், வடுகப்பட்டி, அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகளை நிரப்பும் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் (பாமக) இல.வேலுசாமி :

தென்பெண்ணை ஆற்றில் ஓடும் உபரி நீரை கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம், குமரன் மற்றும் செனாக்கல் தடுப்பணை திட்டங்கள் வழியாகச் செயல்படுத்தினால், அரூா் மற்றும் மொரப்பூா் வட்டாரப் பகுதியில் வேளாண்மை பணிகள் மேலும் சிறக்கும். இதேபோல், காவிரியில் ஓடும் உபரி நீரை பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து நீா்த்தேக்கங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கோவி.சிற்றரசு:

தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் திட்டமானது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளை தூா்வார தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, நீா் ஆதாரங்களைப் பெருக்கவும், வேளாண்மைப் பணிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன் :

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தில் விடுபட்டுள்ள பிற ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளையும் நிரப்ப வேண்டும். இந்தத் திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளை தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் தொடங்கி, நிறைவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com