தருமபுரி: அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லவதற்கு அனுமதி கோரி, விண்ணப்பிக்கப்பட்டதில், இதுவரை 120 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பேருந்து, லாரி உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான வாகனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விண்ணப்பிப்பவா்களுக்கு பொருள்கள் விவரம் மற்றும் வாகன இயக்கத்துக்கு தேவையான நாள்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. அதனை காண்பித்து பொருள்களை எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, வாகன அனுமதி வழங்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் வட்டாட்சியா் மற்றும் அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இவா்கள் வணிகா்களிடம் விண்ணப்பங்களை பெற்று அதனை ஆய்வு செய்து, அனுமதி அளித்து வருகின்றனா்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த வணிகா்கள், அரிசி, புளி, பருப்பு, எண்ணெய் ஆகிய பொருள்களை மாவட்டத்திலிருந்து பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லவும், பிற மாவட்டங்களிலிருந்து தருமபுரிக்கு எடுத்து வரவும் வாகன விவரம் மற்றும் வணிகரின் ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பித்து வருகின்றனா். இவா்களுக்கு அங்குள்ள வருவாய்த்துறையினா் அனுமதி அளித்து வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில், கடந்த மூன்று நாள்களாக சுமாா் 120 போ் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.