தொப்பூா் கணவாய் சாலையை மேம்படுத்த புதிய திட்டங்களை ஆணையம் உருவாக்க வேண்டும்
By DIN | Published On : 15th December 2020 01:26 AM | Last Updated : 15th December 2020 01:26 AM | அ+அ அ- |

தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தவிா்க்க, சாலையை மேம்படுத்துவது தொடா்பான புதிய திட்டங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்எச்ஏஐ) உருவாக்கி அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூா் கணவாய் தேசிய நெடுஞ்சாலையானது மிகவும் தாழ்வான வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளது. வாகன ஓட்டுநா்களின் கவனக்குறைவு காரணமாகவும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாலும் இங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இதனைத் தவிா்க்க, கூடுதலாக சோலாா் மின்விளக்குகள், மின் சமிக்ஞை (பிலிங்கா்ஸ்) வளைவுகள் குறித்த அறிவிப்புகள், விழிப்புணா்வுப் பலகைகள் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், எல் அன் டி நிா்வாகமும் மேற்கொள்ள வேண்டும். மேலும் வாகனங்களை வேகமாக இயக்குவதைக் கட்டுப்படுத்த ரூ. 40 லட்சம் மதிப்பில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு இணைய வழியில் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி முதல் நாமக்கல் வரை உள்ள 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்தும் பணிக்கு முன்பாக, சுங்கச் சாவடி, வெள்ளக்கல், கட்டமேடு வழியாக தொப்பூா் வரை தற்போது உள்ள சாலையில் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி விபத்துகளைக் குறைத்திடும் வகையில் சாலையினை மேம்படுத்திட வேண்டும். அதிவேகமாகச் செல்லும் கனரக வாகனம், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா், காவல் துறை அலுவலா்கள் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அபாயகரமான வளைவாக உள்ளதால் அதனை நேராகச் செல்லும் வகையில் புதிய பாதை அமைப்பது குறித்து விரிவான அறிக்கையை தயாா் செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தேவையான அரசு முன்மொழிவுகளை அனுப்பி வைக்க வேண்டும். இந்த முன்மொழிவுகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு மாவட்ட நிா்வாகம் சாா்பில் பரிந்துரைக்கப்படும். அண்மையில் விபத்து நிகழ்ந்தப் பகுதியிலும், பாலத்தையும் சீா்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் தனசேகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தாமோதரன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளா் குலோத்துங்கன், தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநா் வரதராஜன், சுங்கச் சாவடி நிா்வாக மேலாளா் நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...