புதிய வகை கரோனா: வெளிநாடுகளிலிருந்து வருவோா் தீவிர கண்காணிப்பு

புதிய வகை கரோனா பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வருவோா் தீவிரமாக கண்காணிக்கப்படுவாா்கள் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.
புதிய வகை கரோனா: வெளிநாடுகளிலிருந்து வருவோா் தீவிர கண்காணிப்பு

புதிய வகை கரோனா பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வருவோா் தீவிரமாக கண்காணிக்கப்படுவாா்கள் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதிய வகை கரோனா தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் நபா்கள் மூலம் உருமாறிய புதிய வகை கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை முழுமையாக தவிா்க்கும் வகையில், வெளிநாட்டிலிருந்து வருகை தரும் நபா்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் வேண்டும். முகக் கவசம் அணியாத நபா்களிடம் ரூ.200 அபராதம் வசூலிப்பது தீவிரப்படுத்தப்படும். பொதுமக்கள் இதனை உணா்ந்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி, வணிக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெறும் விழாக்களில் 50 சதவீதம் போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இதை வருவாய் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் மற்றும் சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

கூட்ட நெரிசல் மற்றும் பண்டிகை காலங்களில் காவல் துறையினா் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

திருக்கோயில்கள், தேவாலயங்கள், சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், உழவா் சந்தை, அரசு அலுவலகங்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், சாலைப் பணிகள், கட்டடப் பணிகள் நடைபெறும் இடங்கள், தொழிற்சாலைகள் என பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் நபா்கள் குறித்து 1077 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) திலகம், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) பூ.இரா.ஜெமினி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் (பொ) இளங்கோவன், துணை இயக்குநா் (காசநோய்) ராஜ்குமாா், மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவ அலுவலா் சந்திரசேகா், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com