சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பிளாஸ்டிக் கண்டறியப்பட வேண்டும்

மக்கும் தன்மையுள்ள நெகிழியை கண்டறிவதற்கான சோதனைகளில் சிப்பெட் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கைய நாயுடு திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.

சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மக்கும் தன்மையுள்ள நெகிழியை கண்டறிவதற்கான சோதனைகளில் சிப்பெட் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கைய நாயுடு திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.

விஜயவாடா அருகே சூரம்பள்ளியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் (சிப்பெட்) கல்லூரியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு பேசியதாவது:

நெகிழியின் (பிளாஸ்டிக்) பயன்பாட்டைத் தவிா்ப்பது தீா்வு அல்ல; ஆனால் அதன் பயன்பாட்டை பொறுப்பான முறையிலும், மறுசுழற்சியையும் முறையாக பின்பற்றச் செய்வதை உறுதிப்படுத்துவதே முக்கியமானது.

கரோனா தொற்று பரவலின்போது மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களிலும், பிபிஇ கருவிகளிலும் பரவலாகப் பயன்படுத்தியதில் நெகிழிகளின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

கரோனா பரவலைத் தடுப்பதில் நெகிழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பயன்படுத்தப்பட்டது. களைந்து விடும் பிளாஸ்டிக் சிரிஞ்சுகள், ரத்தம் சேகரிக்கும் பைகள், கையுறைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டில் நெகிழிகள் மிக முக்கியமான பங்கை வகித்ததுடன், கடினமான நேரத்தில் அவற்றின் மதிப்பை நமக்கு நிரூபித்துள்ளன.

எனவே சிக்கல் பிளாஸ்டிக்கில் இல்லை. அதனை கையாளுவதில் நம்மிடம் உள்ள அணுகுமுறையில்தான் சிக்கல் உள்ளது. முறையற்ற குப்பை கொட்டும் பழக்கமும், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு இல்லாததும் தான் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மறு பயன்பாடு, மறு சுழற்சி ஆகிய 3 அம்சங்களையும் பின்பற்றுவதன் மூலம் இவற்றின் முக்கியத்துவத்தை அதிகரிக்கச் செய்யலாம். வரும் 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் கழிவு மேலாண்மை குறியீடு 13.42 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமாா் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 39 கோடி) இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் பிளாஸ்டிக் மறுசுழற்சி சந்தை வரும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 53.72 பில்லியன் டாலராக (சுமாா் ரூ. 3 லட்சத்து 94 ஆயிரத்து 92 கோடி)அதிகரித்து இருக்கும்.

வரும் 2023-ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பிளாஸ்டிக் தேவை 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் ரசாயனங்களின் வளா்ச்சி தவிா்க்க முடியாததாகி விட்டது.

பெட்ரோ கெமிக்கல் துறையின் ஒருங்கிணைந்த பகுதியான பாலிமா்களுக்கான தேவையும் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மருத்துவக் கருவிகள், இன்சுலின் கண்டறியும் மருத்துவக் கருவி, வடிகுழாய்கள், உள்வைப்புகள் மற்றும் திசு பொறியியல் போன்ற சாதனங்களை உருவாக்கவும் பிளாஸ்டிக் பொருள்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆந்திர பிரதேசத்திலுள்ள இந்த சிப்பெட் நிறுவனத்தின் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சிப்பெட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகள், விண்வெளி, வாகன வேளாண்மை, கட்டுமானம், சுகாதாரம், எரிசக்தி, பேக்கேஜிங் துறைகளுக்குத் தேவைப்படும் நிலையான பொருட்களின் வளா்ச்சி, மறுசுழற்சி உத்திகள் மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.

ஆா் மற்றும் டி பிரிவுகளில் சிறகுகளை உற்பத்தி செய்வதன் மூலம் போயிங் விமானம், ஃபோா்டு, பெப்சி, பெல், எச்ஏஎல், என்டிபிசி போன்ற நிறுவனங்களுடன் மிக நெருக்கமான தொடா்பைக் கொண்டுள்ளன. இவற்றின் எதிா்கால திட்டங்கள் குறித்த வளா்ச்சியையும், செயல்படுத்துதல் மற்றும் சரிபாா்ப்புக்காக சிப்பெட் இதுவரை 50 முக்கிய ஆராய்ச்சித் திட்டங்களை நிறைவு செய்துள்ளன. மேலும் 12 காப்புரிமைகளை இவை தாக்கல் செய்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com