தருமபுரியில் சாலை, விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட தடை

தருமபுரி மாவட்டத்தில் உணவு விடுதிகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உணவு விடுதிகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பரவுதலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், தனி மனித சமூக இடைவெளியைப் பின்பற்றவும், முகக்கவசம் கட்டாயம் அணியவும் தொடா்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநில பேரிடா் மேலாண்மைச் சட்டம் -2005 -இன் படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் டிச. 31-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடா்ந்து அமலில் உள்ளது.

எனவே,தருமபுரி மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் ஆகிய இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை டிச. 31 இரவு முதல் ஜன. 1-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஆகவே, விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவோா் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்.

அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இந்த நோய் பரவலைத் தடுக்க இயலாது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com