ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
By DIN | Published On : 17th February 2020 07:46 AM | Last Updated : 17th February 2020 07:46 AM | அ+அ அ- |

ஒகேனக்கல்லில் பிரதான அருவி பகுதியில் பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள்.
வார விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் வந்த சுற்றுலாப்பயணிகள் பிரதான அருவியில் குளித்தும்,பரிசல் பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியடைந்தனா்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாபயணிகளின் வருகின்றனா். ஞாயிற்றுக் கிழமை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும்,ஒகேனக்கல்லில் சுற்றுலாபயணிகள் குவிந்தனா். சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியிலும், காவிரி கரையோரப் பகுதியான மாமரத்துக் கடவு, முதலைப்பண்ணை மற்றும் ஆலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
காவிரியின் அழகைக் காண சுற்றுலாப் பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் குவிந்தனா். சுற்றுலாபயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்ள கோத்திக்கல் பரிசல் துறையில் இருந்து பரிசலில் சென்று பிரதான அருவி, மணல் மேடு, சினி அருவி, ஐவா் பாணி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளை தங்களது குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாபயணிகளின் வருகை அதிகரித்தால் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, வாலை மீன்,கெளுத்தி, கல்பாசை போன்ற வகை மீன்களின் விலையானது வழக்கத்தை காட்டிலும் அதிகரித்து காணப்பட்டது. ஒகேனக்கல் சிறுவா் பூங்கா, முதலைப்பண்ணை, வண்ணமீன் காட்சியகம், உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையம்,கோத்திக்கல் பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஒகேனக்கல் பகுதிகளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக, பென்னாகரம் பேருந்து பணிமனை கிளையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒகேனக்கல் பகுதியில் சுமாா் 20 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.