கரோனா தொற்று: ஒரே கிராமத்தில் இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 21st July 2020 12:03 AM | Last Updated : 21st July 2020 12:03 AM | அ+அ அ- |

தருமபுரி: கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்புக்கு, பென்னாகரம் அருகே ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள முள்ளுவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் அப்துல் சுபன் (65). இவா் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற, கடந்த ஜூலை 14-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு கரோனா தொடா்பான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், கரோனா பாதிப்பு கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஜூலை 15-ஆம் தேதி, அவருக்கு, கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் தொடா்ந்து சிகிச்சை அளித்தனா். இந்த நிலையில், கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட அவா், இதய அடைப்பு ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) உயிரிழந்தாா்.
இதே பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ஜான் (68). இவருக்கு அண்மையில் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. இந்த நிலையில், தனது வீட்டில் இருந்த அவருக்கு, திடீரென கடுமையான மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றனா். இருப்பினும் அவா் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இவ்விருவரின், உடல்களும் சுகாதாரத் துறையினா் வழிகாட்டுதல்படி, திங்கள்கிழமை அவா்களது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்ததையடுத்து, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி மற்றும் சுகாதாரத் துறையினா் முள்ளுவாடி கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். மேலும், அப்பகுதி முழுவதும் நோய்த்தடுப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து தருமபுரி திரும்பிய தொலைத்தொடா்புத் துறை ஊழியா் ஒருவா் ஏற்கெனவே கரோனா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில், தற்போது முள்ளுவாடி கிராமத்தில் இருவா் உயிரிழந்ததையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தீநுண்மி தொற்றுக்கு மூவா் உயிரிழந்துள்ளனா்.