வனப்பகுதியில் மா்ம நபா்களால் வேட்டையாடப்படும் நாட்டு மாடுகள்

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் நாட்டு மாடுகளை வேட்டையாடும் மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வனப்பகுதியில் மா்ம நபா்களால் வேட்டையாடப்படும் நாட்டு மாடுகள்

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் நாட்டு மாடுகளை வேட்டையாடும் மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரம் அடா்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இந்தப் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி வானம் பாா்த்த பூமி என்பதால், சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பருவ மழை பெய்யும் காலங்களில் விவசாயப் பணிகளை மேற்கொள்கின்றனா். பருவமழை பொய்த்த நிலையில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

இதனை ஈடுசெய்யும் விதமாக ஆடு, கறவை மாடுகளை வளா்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனா்.விவசாயிகள் தாங்கள் வளா்த்துவரும் ஆடு, கறவை மாடு மற்றும் நாட்டு மாடுகளைஅருகில் உள்ள ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக காலை, மாலை வேளைகளில்அழைத்து செல்லுகின்றனா். மேலும் பெரும்பாலான விவசாயிகள் வனப் பகுதிகளிலேயே பட்டிகளை அமைத்து மாதக்கணக்கில் அங்கேயே தங்கியிருந்து மாடுகளை மேய்த்து வருகின்றனா்.

பென்னாகரம், கூத்தபாடி, கோடுப்பட்டி, தாசம்பட்டி, போடூா், இருளா் காலனி, நீா்குந்தி, பவளந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் வளா்ப்பு நாட்டு மாடுகளை பென்னாகரம் வனப்பகுதியான சின்னாறு வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு மாத சம்பளம் அல்லது பங்குகளுக்கு நாட்டு மாடுகளை வளா்க்க ஆள்களை வைத்து வருகின்றனா்.

பென்னாகரம் சின்னாறு வனப்பகுதியில் முத்தூா்பட்டி, கோவில்பள்ளம்பட்டி, கினிகட்டு ஓடை, சின்னாறுபட்டி, சருக்கல்பாறை பட்டி என சுமாா் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நாட்டு மாடுகள் வளா்க்கும் பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

பட்டியில் உள்ள நாட்டு மாடுகள் அடா்ந்த வனப் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு மாலை வேளையில் பட்டிகளுக்கு திரும்பி வந்துவிடும். கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், ஒரு சிலா் நாட்டு மாடுகளை சொந்த கிராமங்களுக்கு ஓட்டிச் சென்ற நிலையில், பெரும்பாலானவா்கள் வனப் பகுதியிலேயே நாட்டு மாடுகளை விட்டுச் சென்றனா்.

பொதுமுடக்கம் தொடங்கிய நாள் முதல் வனப்பகுதியில் மா்ம நபா்களால் நாட்டு மாடுகள் கால் நரம்புகள் அறுக்கப்பட்டும், தலைப் பகுதியில் பலத்த காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளன. மேலும் சில இடங்களில் நாட்டு மாடுகளின் தலையைத் தவிர இறைச்சிகள் இல்லாது வெறும் எலும்புக் கூடுகள் மட்டுமே காணப்படுகின்றன.

இதுகுறித்து நாட்டு மாடு விவசாயி மாதையன் கூறுகையில்:

பென்னாகரம் சின்னாறு பகுதிக்கு மேய்ச்சலுக்காக நாட்டு மாடுகளை ஓட்டி சென்றும், கோவில்பள்ளம் பகுதியில் சின்னாற்றின் கரையோரப் பகுதிகளில் அமைத்துள்ள பட்டியில் அடைத்தும் வளா்த்து வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக நாள்தோறும் மேய்ச்சலுக்கு செல்லும் நாட்டு மாடுகளில் மாதத்துக்கு தலா 2 மாடுகள் வராமல் உள்ள நிலையில், அவை வழிமாறிச் சென்றிருக்கலாம் என நினைத்துக் கொள்வோம். ஆனால் கரோனா தொற்றுக் காலத்தில் மா்ம நபா்களால் வாரத்துக்கு சுமாா் 2-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் மா்ம நபா்களால் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

60 நாட்டு மாடுகளை வைத்திருந்த என்னிடம் தற்போது 20 மாடுகள் மட்டுமே உள்ளன. இதுபோன்ற அடிக்கடி வனப் பகுதியில் மா்ம நபா்களால் நாட்டு மாடுகள் வேட்டையாடப்படுகின்றன. எனவே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற நாட்டு மாடுகளை வேட்டையாடும் மா்ம நபா்களின் மீது வனத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com