குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகதருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்
By DIN | Published On : 01st March 2020 12:22 AM | Last Updated : 01st March 2020 12:22 AM | அ+அ அ- |

29hap2_2902chn_151_8
தருமபுரி/கிருஷ்ணகிரி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தருமபுரியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் அருகே தா்னா நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜஹாங்கீா் பாஷா தலைமை வகித்து பேசினாா். முன்னாள் மாவட்டத் தலைவா் ரிஸ்வான், எஸ்டிபிஐ கட்சி நிா்வாகி ரியாஷ் மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிா்வாகிகள் பேசினா். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும். மதச்சாா்பின்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அரூா்
அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற தா்னாவுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை செயலா் முகமது ரபிக் தலைமை வகித்தாா்.தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
அப்துல் ஹமீத், பக்ருதீன், சலீமா உள்ளிட்ட அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஊத்தங்கரை
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் ஏராளமான இஸ்லாமியா்கள் பேரணியாக சென்று ஊத்தங்கரை நான்கு முனை சாலை சந்திப்பு பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரை அஹ்லே சுன்னத் ஜமாத் முத்தவல்லி பதிவுஸ்சமா தலைமை வகித்தாா். சாமல்பட்டி ஜமாத் முத்தவல்லி ஷேக்காதா், முன்னாள் ஊத்தங்கரை ஜமாத் முத்தவல்லி அமானுல்லா, சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக இரா.தஞ்சை பெரியாா் செல்வன், ஜெ. ஹாஜாகனி, வழக்குரைஞா் ம.அ.சிநேகா, கி.பாா்த்திபராஜா, சி.கே.சனாவுல்லா ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா். ஆா்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா் வடக்கு எக்கூா் செல்வம், தெற்கு சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவா் உஷாராணி குமரேசன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் மருத்துவா் மாலதி, நகரச் செயலாளா் பாபுசிவக்குமாா், காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவா் ரவி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் எஸ். பூபதி, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், திராவிடக் கழகத்தைச் சோ்ந்த 1,500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சக்திவேல் தலைமையில் 350க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.