அரூரில் கூடுதல் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 12th March 2020 07:44 AM | Last Updated : 12th March 2020 07:44 AM | அ+அ அ- |

அரூரில் கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் வட்டாரப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனக்கள் ஐந்தும், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்கு ஒரு 108 ஆன்புலன்ஸ் வாகனமும் இயக்கப்படுகின்றன.
அரூா் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 1,500 புறநோயாளிகளும், 200-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா். அரூா் அரசு மருத்துவமனையிலிருந்து இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சேலம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்காக தினமும் நோயாளிகளை அழைத்துச் செல்கிறது.
இந்த நிலையில், அரூா் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக செல்வோா் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
இதனால், அவசர தேவையெனில் சின்னாங்குப்பம், மொரப்பூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து, அதன் பிறகு அரூரில் இருந்து தீவிர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் நிலை உள்ளது.
இதனால், நோயாளிகளுக்கு அவசரகால மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, அரூா் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் தீா்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து கூடுதலாக இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.