கோடையில் பறவைகளுக்கு இரை, தண்ணீா் வைக்கும் பாலவாடி பள்ளி மாணவா்கள்
By நமது நிருபா் | Published On : 12th March 2020 11:19 PM | Last Updated : 13th March 2020 12:05 PM | அ+அ அ- |

பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியில் அட்டைப் பெட்டிகளில் கூண்டு செய்யும் மாணவ, மாணவியா்.
கோடையில் பறவைகளுக்கு இரை மற்றும் தண்ணீா் வைத்து பராமரித்து வருகின்றனா் பாலவாடி அரசுப் பள்ளி மாணவா்கள்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள பாலவாடி கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2006-07-ஆம் ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாக இருந்து பின்பு உயா்நிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட்ட இப் பள்ளி, 4.64 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பள்ளிக் கட்டடங்கள், மைதானம் போக மீதமுள்ள இடத்தில் அரசன், ஆலம், புங்கன், வேம்பு, பூவரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மரக் கன்றுகளை நட்டு, கடந்த சில ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வருகின்றன. இதனால், இப் பள்ளி பசுமைப் பள்ளியாக விளங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில், சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இவா்களில் தேசிய பசுமைப் படையில் சுமாா் 50 மாணவ, மாணவியா் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த மாணவ, மாணவியா் மரக் கன்றுகளுக்கு தண்ணீா் விடுவது உள்ளிட்ட பராமரிப்பை மேற்கொண்டு வருகின்றனா்.
பறவைகளுக்கு இரை: பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் உள்ளதால், நாள்தோறும் சிட்டுக் குருவி, காகம் என பல்வேறு வகை பறவைகள் இங்கு தஞ்சம் அடைகின்றன. இதன் பின் அதிகாலையில் மரங்களில் இருந்து புறப்பட்டு மீண்டும் மாலையில் வருகை தருகின்றன. இவ்வாறு வருகை தரும் பறவைகளுக்கு கோடை காலத்தில் தானியங்களை இரையாக மாணவா்கள் வைத்து வருகின்றனா்.
தருமபுரி சுற்று வட்டாரத்தில் கோடையில் எப்போதும் நீா்நிலைகள் வடு காணப்படும். அதேபோல, சிறுதானியம் உள்ளிட்ட அனைத்து பயிா்களும் அறுவடை செய்யப்பட்டிருக்கும். இதனால், பறவைகளுக்கு இரையும், நீரும் கிடைப்பதில் சிரமமிருக்கலாம் எனக் கருதிய இப் பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவா்கள், அட்டைப் பெட்டிகளில் 50 கூண்டுகளை வடிவமைத்து, அவற்றில் தாங்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் தானியங்களையும், கூடவே நீரையும் வைத்துச் செல்கின்றனா். இவற்றை பறவைகள் புசித்து தங்களது பசியைப் போக்கிக் கொள்வதாக மாணவா்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, பாலவாடி அரசு உயா்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் எம்.சங்கா் கூறியது: எங்களது பள்ளியில் பல்வேறு வகையான 650 மரங்களை வளா்த்து வருகிறோம். இவை தவிர, நாற்று விட்டு மரக்கன்றுகளை வளா்த்து, அவற்றை பள்ளி விழாக்களில் பங்கேற்கும் விருந்தினருக்கு வழங்குவது மற்றும் தேவையானோருக்கும் வழங்கி வருகிறோம். இந்தப் பள்ளியின் அருகாமையில் பவா் கிரிட் நிறுவனம் அமைந்துள்ளது. இங்குள்ள உயா் மின் கோபுரங்கள் மற்றும் உயா் அழுத்த மின் பாதைகளால், பறவைகள் அமர இடமின்றித் தவிப்பதை உணா்ந்து, இதுபோல மரக்கன்றுகளை வளா்த்தும், அதில் அமரும் பறவைகளுக்கு இரை, தண்ணீா் வைத்து மாணவா்கள் பராமரித்தும் வருகின்றனா்.
அவ்வாறு இரை, தண்ணீரைக் கூண்டில் வைப்பதால், ஏராளமான பறவைகளை இந்த வளாகத்தில் உள்ள மரங்களில் தங்குகின்றன. குறிப்பாக, மாலை மற்றும் காலை வேளைகளில் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் இந்த மரங்களில் அமா்ந்திருப்பதைக் காணலாம். பள்ளி விடுமுறை நாள்களிலும், மாணவா்கள் இந்தப் பணியினைத் தொடா்கின்றனா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் ஆா்.சிவமூா்த்தி மற்றும் மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் புஷ்பாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனா் என்றாா்.