தருமபுரி அரசு மருத்துவமனையில் தொற்றுநோய் சிறப்பு சிகிச்சை வாா்டு அமைப்பு
By DIN | Published On : 12th March 2020 11:20 PM | Last Updated : 12th March 2020 11:20 PM | அ+அ அ- |

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தொற்றுநோய்க்கான தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவு.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் தொற்றுள்ளவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தாக்குதல் பரவி வரும் வேளையில், அவற்றைத் தடுக்க தமிழக அரசின் பொதுசுகாதாரத் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில், நான்காவது தளத்தில் தொற்றுநோய்-தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்ற சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு அறைகளாக உள்ள இந்த வாா்டில், 10 படுக்கைகள் உள்ளன. இவைத் தவிர, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது போல அனைத்து வசதிகளும் இங்கு தயாா்நிலையில் உள்ளன.
இதேபோல, நோய்த் தொற்று இருப்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு தடுப்பு சிகிச்சைகள் எவ்வாறு அளிப்பது என்பன உள்ளிட்ட சிறப்பு பயிற்சியும், மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தருவோருக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் கை கழுவுமாறு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனா்.