விபத்தில் உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 18th May 2020 11:43 PM | Last Updated : 18th May 2020 11:43 PM | அ+அ அ- |

தருமபுரி: சாலை விபத்தில் உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் மற்றும் அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தியுள்ளது.
இகுறித்து, அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆஸ்டின் ஜீவராஜ் ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளித்த மனு: தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்துவந்த குமுதா (38) என்பவா் அண்மையில் மருத்துவமனையில் பணி முடிந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பும்போது, விபத்துக்குள்ளாகி உயிரிழந்தாா். இவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொரு செவிலியா் பாலமணி (41) என்பவா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த செவிலியா் குமுதாவின் குடும்பத்துக்கு, நிவாரண நிதி ரூ.50 லட்சமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா்கள், அனைத்து நிலை ஊழியா்கள், பணியாளா்களுக்கும் என்-95 முகக் கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இதேபோல, ஓய்வறை, தங்கும் வசதி, போதிய கழிப்பறைகள், சுழற்சி அடிப்படையில் பணி, அவா்கள் தங்கும் இடத்திலிருந்து வந்து செல்ல ஏதுவாகப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனா்.