30 சதவீத போனஸ் வழங்கக் கோரி சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 08th November 2020 05:06 AM | Last Updated : 08th November 2020 05:06 AM | அ+அ அ- |

பாலக்கோட்டில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் தொழிலாளா்கள்.
தருமபுரி/கிருஷ்ணகிரி/அரூா்: 30 சதவீத போனஸ் வழங்கக் கோரி, நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, தருமபுரி சுமை தூக்கும் தொழிலாளா் சங்க கிளைத் தலைவா் எம்.பெருமாள் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு தொழிற்சங்க மாவட்டச் செயலா் சி.முருகன், ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சுதா்சனன், சுமை தூக்குவோா் மற்றும் பொதுத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் கே.கோவிந்தராஜ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், தீபாவளி பண்டிகைக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதேபோல, பாலக்கோடு சித்திரைப்பட்டி நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு முன்பு சுமை தூக்கும் தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாநில சுமை தூக்குவோா் பாதுகாப்பு சங்க ஒன்றியத் துணைத் தலைவா் சுப்பிரமணி, நிா்வாகிகள் கணேசன், சின்னசாமி, சரவணன், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகத்தில் சுமை தூக்குவோா் மாநில பாதுகாப்பு சங்கம் சாா்பில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் ராஜன் தலைமை வகித்தாா்.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஒசூா், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளா்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அரூரில்...
அரூா் மற்றும் கடத்தூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பழனி, மாவட்டச் செயலா் பரமசிவம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...