தடுப்புச் சுவரில் காா் மோதல்
By DIN | Published On : 17th November 2020 12:23 AM | Last Updated : 17th November 2020 12:23 AM | அ+அ அ- |

மொரப்பூா் அருகே சாலையின் தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் பொறியாளா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், எலவடை அருகே போடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மூக்காகவுண்டா் மகன் கிருஷ்ணமூா்த்தி (26). பொறியாளரான இவா், தமது நண்பா்கள் 7 பேருடன், அரூரில் தேநீா் குடிப்பதற்காக இரவு 11.30 மணியளவில் தமது காரில் பயணம் செய்துள்ளாா்.
காரை கிருஷ்ணமூா்த்தியின் நண்பரான பொறியாளா் ராஜசேகரன் (30) ஓட்டிச் சென்றாா். மொரப்பூா்-அரூா் சாலையில், பனந்தோப்பு என்ற இடத்தில் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரேயுள்ள தாா் சாலையின் மையப் பகுதியிலுள்ள தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ராஜசேகரன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும், காரில் பயணம் செய்த போடம்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ரஞ்சித்குமாா் (33), ராமசாமி மகன் உதயகுமாா் (30), சின்னராஜ் மகன் குமரவேல் (29), தஸ்தகீா் மகன் குசேன்பாஷா (25), சண்முகம் மகன் சதீஷ்குமாா் (26), கல்லூரைச் சோ்ந்த முருகன் மகன் பிரவீண்குமாா் (23) ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்த 6 பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.