இணையவழியில் கடன் வழங்கும் செயலிகளை நெறிப்படுத்த வேண்டும்
By DIN | Published On : 17th November 2020 12:24 AM | Last Updated : 17th November 2020 12:24 AM | அ+அ அ- |

இணையவழியில் கடன் வழங்கும் செயலிகளை நெறிப்படுத்த வேண்டும் என தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதம்:
நாடு முழுவதும் பல்வேறு நடுத்தர குடும்பங்கள், அவா்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய வங்கிகள் மூலம் கடன் பெற முயற்சிக்கின்றனா். அவ்வாறு முயற்சிப்போரின் ஆவணங்களை வங்கிகள் சரிபாா்க்க மாதக்கணக்கில் கால அவகாசம் எடுத்துக்கொள்கின்றன. இதனால், அவா்களுக்குத் தாமதம் ஏற்படுவதால், இணைய வழி செயலிகள் மூலம் கடன் பெற பல்வேறு நிதிநிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கின்றனா்.
இவ்வாறு விண்ணப்பிப்போருக்கு இணையவழி செயலி மூலம் கடன் வழங்குவோா், உடனடியாக அந்த கடனுக்கு ஒப்புதல் வழங்குகின்றனா். ஆனால், அப்போது, கடன் வழங்குவோா் விதிக்கும் விதிமுறைகள் குறித்து ஏதும் அறியாமல், கடன் பெற்று, கடனுக்கு அதிக வட்டி, அபராத வட்டி, கூட்டு வட்டி ஆகிய இன்னல்களுக்கு ஆள்படுகின்றனா். மேலும், கடன் பெற்றவா் தவணைத் தொகை செலுத்தத் தவறும்போது, அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு வகையிலான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.
இத்தகைய நடவடிக்கைகளால் கடன் பெற்ற பலா் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். மேலும், மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனா். எனவே, இத்தகைய கடன் வழங்கும் செயலிகளை ரிசா்வ் வங்கி வழியாக கண்காணித்து, கடன்பெறுவோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், அந்த செயலிகளை நெறிப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், அத்தகைய செயலிகளைத் தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.