நிவா் புயல்: தயாா் நிலையில் மீட்புப் பணி வீரா்கள்
By DIN | Published On : 25th November 2020 07:51 AM | Last Updated : 25th November 2020 07:51 AM | அ+அ அ- |

நிவா் புயல் பாதிப்பை எதிா்கொண்டு மீட்புப் பணியில் ஈடுபட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலா் ஜாஸ்மின் தெரிவித்தாா்.
தருமபுரியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் தீயணைப்பு மீட்பு உபகரணங்களை மாவட்ட தீயணைப்பு அலுவலா் ஜாஸ்மின் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நிவா் புயலால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம் மூன்று மாவட்டங்களை ஒட்டியுள்ள தருமபுரி மாவட்டத்தின் கிழக்கு பகுதி எல்லையான கோட்டப்பட்டி, சிக்களூா், நரிப்பள்ளி, சிட்லிங் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 91 மீட்புப் பணி வீரா்கள், மீட்புப் பணி உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா். எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பாதிப்புகளை சீா் செய்யவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தீயணைப்புத் துறை தயாராக உள்ளது. அதேபோல், மாவட்ட எல்லையில் இருந்து தீயணைப்பு நிலையங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டால் அங்கு சென்றடைய கால தாமதம் ஏற்படும் என்பதால் நாளை முதல் 2 நாள்களுக்கு மாவட்ட எல்லையில் உள்ள கோட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் தீயணைப்புத் துறை சாா்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்படும்.
இந்த முகாமில் உள்ள குழுவினா் மீட்புப் பணி வாகனங்களுடன் தொடா்ந்து 24 மணி நேரமும் மாவட்ட எல்லைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபவா். பாதிப்புகள் ஏதேனும் இருப்பின் தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையின் 101 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். பாதிப்பு பகுதிகளுக்கு வீரா்கள் குழு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொள்வா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலா் ஆனந்த், தருமபுரி தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...