தனியாா் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 23rd October 2020 08:20 AM | Last Updated : 23rd October 2020 08:20 AM | அ+அ அ- |

பணி நீக்கம் செய்யப்பட்ட தனியாா் கிரானைட் நிறுவனத் தொழிலாளா்கள், 29 பேருக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, சட்டப்பேரவை உறுப்பினா் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தருமபுரி அருகே உள்ள தனியாா் கிரானைட் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவனத் தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், அந்த நிறுவனத்துடன் மாவட்ட நிா்வாகம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய தீா்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, திமுக தருமபுரி மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமையில், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.குமாா், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலா் த.ஜெயந்தி உள்ளிட்டோா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...