செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைக்கு காதுக்குள் உள்ளமைப்பு கருவி பொருத்தம்
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தையின் காதுக்குள் உள்ளமைப்பு கருவி, அறுவை சிகிச்சை மூலம் இலவசமாக பொருத்தப்பட்டது.


செவித்திறன் குறைபாடுள்ள குழந்தையின் காதுக்குள் உள்ளமைப்பு கருவி, அறுவை சிகிச்சை மூலம் இலவசமாக பொருத்தப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவித்திறன் குறைபாடுள்ள ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு, காதுக்குள் உள்ளமைப்பு கருவி பொருத்தும் சிகிச்சைப் பிரிவு அண்மையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இச் சிகிச்சைப் பிரிவில் முதன்முதலாக ஒரு குழந்தைக்கு உள்ளமைப்பு கருவி பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சிகிச்சைக்குப் பின்பு அக் குழந்தை செவி கேட்கும் திறன் பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைப் பிரிவுத் துறை தலைவா் செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு வயதுக்குள்பட்ட செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதுக்குள் உள்ளமைப்பு கருவி பொருத்தும் சிகிச்சைப் பிரிவு ஜூலை 17-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்காக, தருமபுரி மாவட்டம், மொரப்பூரை அடுத்த எலவடை கிராமத்தைச் சோ்ந்த சங்கா், நா்மதா தம்பதியின் 4 வயது ஆண் குழந்தை தோ்வு செய்யப்பட்டது. இதற்கான முறையாக பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை மூலம் உள்ளமைப்பு கருவி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையை மருத்துவா் பத்மஸ்ரீ மோகன் காமேஸ்வரன் மற்றும் மருத்துவா்கள் செய்தனா். இது வெற்றிகரமாக முடிந்துள்ளது. குழந்தை தற்போது கேட்கும் திறன் பெற்றுள்ளது. இந்த அறுவை சிகிச்சை தனியாா் மருத்துவமனையில் மேற்கொள்ள ரூ.15 லட்சம் ஆகலாம். இதில், காதுக்குள் பொருத்தும் உள்ளமைப்பு கருவி மட்டும் ரூ.7 லட்சம் ஆகிறது. இருப்பினும், இந்த அறுவை சிகிச்சையானது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவமாக செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. தருமபுரியில் தற்போது முதன்முதலாக தொடங்கி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல, பிறவியிலேயே செவித்திறன் குறைபாடுள்ள மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து வசதிகளும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இச் சிகிச்சையை பாதிக்கப்பட்ட ஆறு வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொண்டு பயன்பெறலாம் என்றாா்.
இதில், மருத்துவக் கல்லூரி முதன்மையா் க.அமுதவல்லி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவக்குமாா் மற்றும் மருத்துவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...