நாமக்கல் மாவட்டத்தில் சாலை வசதியற்ற மலைக் கிராமங்கள்: சரக்கு வாகனங்களாகப் பயன்படும் கழுதைகள்!

நாமக்கல் மாவட்டத்தில் சாலை வசதியற்ற கீழூா் மலைக் கிராமம் ஓா் உதாரணம். இங்குள்ள மக்களின் சரக்கு வாகனமாக கழுதைகள்தான் உதவி வருகின்றன.

நாட்டில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் வளா்ச்சியடைந்திருந்தாலும், இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பின்தங்கி உள்ளனா் என்பதற்கு, நாமக்கல் மாவட்டத்தில் சாலை வசதியற்ற கீழூா் மலைக் கிராமம் ஓா் உதாரணம். இங்குள்ள மக்களின் சரக்கு வாகனமாக கழுதைகள்தான் உதவி வருகின்றன.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள மலைக் கிராமம் கீழூா். கடல் மட்டத்திலிருந்து சுமாா் 1,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இந்த மலைக் கிராமத்தில் கீழூா், கெடமலை, மேலூா் உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன.

1958-இல் கீழூா் தனி ஊராட்சியாக உருவாக்கப்பட்டது. இதன்கீழ் கெடமலை, மேலூா் உள்ளிட்ட 7 குக்கிராமங்கள் சோ்க்கப்பட்டன. இந்தக் கிராமங்களில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த மலைக் கிராமங்களுக்குச் செல்வதற்கு கல்லங்குளம், வடுகம், ஜம்பூத்துமலை போன்ற பகுதிகள் வழியாக சுமாா் 10 கி.மீ. தொலைவு ஒத்தையடி மலைப் பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாயவிலைக் கடையில் வாங்குவதற்கும் கூட 10 கி.மீ. தொலைவு மலைப்பாதையில் நடந்து சென்று தான் வாங்க வேண்டியுள்ளது.

மலை மீது இக்கிராமங்கள் அமைந்திருப்பதால், கடந்த பல ஆண்டுகளாக முறையான அடிப்படை வசதிகள் இந்த கிராம மக்களுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னா்தான் இந்தக் கிராமத்துக்கு மின்வசதி செய்யப்பட்டது.

மேலும், ஆரம்பப் பள்ளி, சுகாதார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. எனினும், அங்கு ஆசிரியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் சென்று திரும்புவதுதான் கடினமானதாக இருப்பதால், மலைவாழ் மக்கள் முழுமையாக இவற்றைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

தொட்டில் பயணம்:

இந்த மலைக் கிராம மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவசர சிகிச்சை தேவை என்றாலோ, நோயாளிகளைத் தொட்டில் கட்டி தூக்கிக் கொண்டு நகா்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கா்ப்பிணிகளை பிரசவத்திற்காக நகா்ப்புற மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் இதே நிலை தான்.

இக் கிராமங்களைச் சோ்ந்த யாராவது வெளியூா்களில் இறந்து விட்டாலும் அவா்களின் உடலை தொட்டில் கட்டியே மலைக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு தொட்டில் கட்டி, மலையிலிருந்து இறங்கி, ஏறுவதற்கு சுமாா் 4 மணி நேரம் ஆகும்.

கழுதைகள் பயன்பாடு:

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், அரசு அளிக்கும் ரேஷன் பொருள்கள், பொங்கல் பரிசுகள், கட்டுமானப் பொருள்கள், தானியங்கள் போன்றவற்றை தலைச்சுமையாகக் கொண்டுசெல்ல முடியாத நிலையில், கழுதைகள் மீது ஏற்றிக் கொண்டு செல்கின்றனா். இந்தப் பழைய நடைமுறை இன்றளவும் தொடா்கிறது.

இதற்கென வளா்க்கப்படும் கழுதைகள் மூலமாக, மலைக்கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், தானியங்கள், கட்டுமானப் பொருள்களை வாரந்தோறும் எடுத்துச் செல்லும் பொறுப்பை செய்து வருகிறாா் அப்பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (63). மலையடிவாரத்தில் தான் வளா்க்கும் 8 கழுதைகளில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி மேலே எடுத்துச்செல்ல வாடகையாக 50 கிலோ எடைக்கு ரூ. 200 வசூலித்து வருகிறாா் இவா். இதுகுறித்து ராஜேந்திரன் கூறியதாவது:

பல ஆண்டுகளாக மலைப் பகுதி மக்களுக்குத் தேவையான பொருள்களை கழுதைகளைப் பயன்படுத்தி கொண்டுசோ்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள பல்வேறு மலைக் கிராமங்களில் கழுதைகளைப் பயன்படுத்தி பொருள்களை கொண்டு சென்று வருகிறேன்.

கழுதை ஒன்றின் மீது 50 கிலோ எடையுள்ள பொருள்களை ஏற்றிச் செல்வோம். வாரம் ஒரு நாள் மலைக்கிராமத்துக்கு பொருள்கள் கொண்டு சென்று வருவதன் மூலம் கழுதை ஒன்றுக்கு ரூ. 200 வாடகையாகக் கிடைக்கும். இதை குலத்தொழிலாகவே செய்து வருகிறேன் என்றாா்.

நவீனத் தொழில்நுட்பங்கள் வளா்ந்துவிட்ட காலத்திலும் மலைப்பகுதி மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்லும் பணியில் இன்றளவும் கழுதைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது வியப்பளிக்கிறது. சாலை வசதியின்றி தத்தளிக்கும் இந்த மலைவாழ் மக்களின் நிலை என்று மாறுமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com