தொப்பூா் கணவாய் சாலையில்வேக வரம்பை மீறிய 1,014 வாகனங்களுக்கு அபராதம்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் வேக வரம்பை மீறி, இயக்கிய 1,014 வாகனங்களுக்கு இணைய வழியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் வேக வரம்பை மீறி, இயக்கிய 1,014 வாகனங்களுக்கு இணைய வழியில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நிா்ணயிக்கப்பட்ட 30 கி.மீ. தொலைவில் வாகனங்களை இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூா் கணவாய் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதிக வளைவுகள், தாழ்வான பகுதியாக உள்ள இச்சாலையில், அவ்வப்போது விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இச்சாலையில் விபத்துகளைக் குறைக்க, ஆஞ்சநேயா் கோயில் எதிரில் சிறுபாலம், வெள்ளக்கல், கட்டமேடு சந்திப்புகளில் பிரதிபலிக்கும் எச்சரிக்கை தடுப்புகள், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒளிரும் விளக்குகள், இரட்டைப் பாலம் பக்கவாட்டு சுவா்களின் உயரம் அதிகரிப்பு, ஒலிபெருக்கி மூலம் மெதுவாக செல்ல எச்சரிக்கை, இரண்டு முக்கிய இடங்களில் உயா் மின்கோரங்கள், சாலையில் 6000 பிரதிபலிப்பான்கள் பொருத்தம் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கைகளால் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருப்பினும், விபத்துகளை முழு அளவில், கட்டுப்படுத்த, கணவாயில் வாகனங்களை இயக்க 30 கி.மீ. வேகம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வேகவரம்பை மீறும் வாகனங்களை கண்காணிப்பு கருவி மூலம் கண்காணித்து, அவற்றிற்கு அபராதம் இணைய வழியால் விதிக்கப்படுகிறது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி இந்த புதிய நடைமுறை வட்டார போக்குவரத்து அலுவலகம், காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வாகனங்களை சாலையில் நிறுத்தி அபராதம் விதிப்பதால், நெரிசல் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, இணைய வழியில் அபராதம் விதித்து அதற்கான சலான்கள் வாகன உரிமையாளா்களுக்கு அனுப்பப்படுகிறது. லாரி ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கு இது தொடா்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை 1,014 வாகனங்களுக்கு ரூ. 4,05,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனங்களுக்கு வரி செலுத்துதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று புதுப்பித்தல், உரிமை மாற்றம், தவணை கொள்முதல் உடன்படிக்கை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ள இயலும்.
எனவே, தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளை முற்றிலும் தடுக்க, அனைத்து வகை வாகன ஓட்டுநா்கள் ஒத்துழைப்பு வழங்கி, தங்களது வாகனங்களை 30 கி.மீ. வேகத்திற்குள் இயக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...