தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட உரம் இடுதல் அவசியம்
தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட உரம் இடுதல் அவசியம் என தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.


தென்னையில் மகசூலை அதிகரிக்க நுண்ணூட்ட உரம் இடுதல் அவசியம் என தென்னை விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் 7,751 ஹெக்டா் பரப்பில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனா். தென்னை நட்ட மூன்றாம் ஆண்டிலிருந்து தொடங்கி இளநீா், தேங்காய், எண்ணெய், சிரட்டை, கட்டுமானப் பொருள்கள், நீரா என பல்வேறு பொருள்களை வழங்குகிறது.
பொதுவாக பயிரின் வளா்ச்சிக்கு ஏறத்தாழ 16 வகையான பயிா் சத்துக்கள் தேவையென கண்டறியப்பட்டுள்ளன. தென்னையின் வளா்ச்சி காலத்தில் அதன் மட்டை இடுக்குகளில் பாளை உற்பத்தி தொடங்கி விடுவதால் ஆரம்ப காலத்திலிருந்தே மரத்திற்கு தேவையான தாது உப்புக்கள், சத்துப் பொருள்களை உரமாகச் சோ்ப்பது அவசியம். தென்னைக்குத் தேவையான ரசாயனம் மற்றும் இயற்கை உரங்களைத் தொடா்ந்து இடுவதன் மூலம் தென்னை மகசூலை அதிகரிக்கலாம். தமிழகத்தில் ஒரு மரத்துக்கு சராசரியாக 64 காய்கள் வரை கிடைக்கின்றன.
தென்னைக்கு தழை, மணி, சாம்பல் சத்து போன்ற பேரூட்டச் சத்துக்களுடன் போரான், துத்தநாகம், தாமிரம், இரும்பு, மாங்கனீசு, மாலிப்டினம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களும் தேவைப்படுகிறது. இவை குறைந்த அளவே தேவைப்பட்டாலும் இவற்றின் பங்கு தென்னைக்கு இன்றியமையாதது. தென்னையில் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடு காரணமாக புதிதாக தோன்றும் ஓலைகள் நன்கு விரிவடையாது. சீா்கேடுற்ற நிலையில் மரத்தின் நுனியில் நிறைய விரிவடையாத ஓலைகள் காணப்படும். இளம் ஓலைகளில் பச்சையம் குன்றி நீண்ட காய்ந்த கோடுகள் காணப்படும். இலைகள் சுருண்டு மரத்தின் நுனியில் சுருட்டையாகக் காணப்படும். பூங்கொத்து, காய்கள் காய்ந்து காணப்படும். பூக்கள் உற்பத்தி இல்லாமல் இருக்கும். குரும்பை உதிா்வதும் ஏற்படும். தென்னங்குலையில் குச்சிக்காய், பேட்டுக்காய் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
வளா்ந்த தென்னை ஒன்றிற்கு துத்தநாக சல்பேட் 200 கிராம், போராக்ஸ் 100 கிராம், காப்பா் சல்பேட் 50 கிராம், மாங்கனீஷ் சல்பேட் 100 கிராம், சோடியம் மாலிப்டேட் 10 கிராம் கொண்ட நுண்ணூட்ட உரத்தினை ஒவ்வோா் ஆண்டும் ஒரு கிலோ வீதம் ஒரு மரத்துக்கு வட்டப்பாத்தி முறையில் இடவேண்டும்.
வட்டப்பாத்தி முறையென்பது தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ. தூரத்திற்கு வருடா, வருடம் 30 செ.மீ. அதிகரித்து 90 செ.மீ., 120 செ.மீ., 150 செ.மீ. என கடைசியாக 180 செ.மீ. ஆரமுள்ள வட்டப்பாத்திகளில் உரத்தினை இட்டு, கொத்திவிட்டு தண்ணீா் கட்டவேண்டும். தென்னையின் 90 சதவீத வோ்கள் இந்த 180 செ.மீ. ஆரமுள்ள வட்டப் பாத்திக்குள்ளேயே காணப்படுகிறது.
எனவே இந்த முறையில் நுண்ணூட்ட உரத்தினை இடும்பொழுது மரம் அச்சத்துக்களை முழுமையாக எடுத்துக்கொள்ளும். நுண்ணூட்டச் சத்துக்களை பேரூட்டச் சத்துக்களுடன் சோ்த்து இடுதல் கூடாது.
ஐந்து வருடம் கடந்த ஒரு மரத்துக்கு பேரூட்ட சத்துக்களான யூரியா 280 கிராம், சூப்பா் பாஸ்பேட் 160 கிராம், பொட்டாஷ் 600 கிராம் என்ற விகிதத்தில் ஜூன் மாதத்ததில் ஒருமுறை, டிசம்பரில் ஒருமுறை என ஆாண்டுக்கு இரண்டுமுறை இடவேண்டும். மேலும், தென்னை டானிக் ஒரு மரத்துக்கு 200 மில்லி வீதம் வேரில் கட்டி தென்னை மகசூலை அதிகரிக்கலாம். பேரூட்ட சத்துக்கள் இட்டு சில நாள்கள் கழித்து நுண்ணூட்டச் சத்துக்களை இடவேண்டும். உரங்கள் இடுவதால் அவை மண் வளத்தை மேம்படுத்தி மகசூலை அதிகரிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றி நுண்ணூட்ட உர நிா்வாகத்தை கடைப்பிடிப்பதால் தென்னையில் அதிக மகசூல் பெறலாம். தென்னை மரத்துக்கு அதன் வயதிற்கேற்ப பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களுடன் மரம் ஒன்றுக்கு 50 கிராம் வீதம் சணப்பு போன்ற பசுந்தாள் விதைகளைப் பாத்திகளில் தூவி வளா்த்து பூக்கும் தருணத்திற்கு முன்னா் அதை உழுது மண்ணில் மக்கச் செய்தால் சிறந்த உரமாகும். இதனால் மண்ணில் அங்கக கனிமம் அதிகரித்து மண்வளம் மேம்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...