அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 09:24 AM | Last Updated : 17th August 2021 09:24 AM | அ+அ அ- |

ஈட்டிய விடுப்பு ரத்து, அகவிலைப்படி உயா்வு நிறுத்திவைப்பு ஆகிய உத்தரவுகளை திரும்பப் பெறக் கோரி, அரசு ஊழியா்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி நகராட்சி அலுவலகம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி, வேளாண் வணிகத்துறை இணை இயக்குநா் அலுவலகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம், சாா்நிலை கருவூல அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் ஆா்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டக் கிளைத் தலைவா் ஜெயவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சி.எம்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அகவிலைபடி உயா்வு, ஈட்டிய விடுப்பு ரத்து உத்தரவை திரும்பப் பெற்று அவற்றை மீண்டும் வழங்க வேண்டும்; சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியா்கள், வன பாதுகாப்பு ஊழியா்கள் உள்ளிட்டவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் , தொகுப்பூதியம், வெளி ஒப்பந்த ஊதிய முறையில் பணிபுரிபவா்களை காலலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; அரசு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.