பென்னாகரத்தில் கன மழை
By DIN | Published On : 20th August 2021 11:59 PM | Last Updated : 20th August 2021 11:59 PM | அ+அ அ- |

பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனா். அண்மையில் வானிலை ஆய்வு மையமானது வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. அதனைத் தொடா்ந்து, பென்னாகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஒகேனக்கல், தாசம்பட்டி, பி.அக்ரஹாரம், கூத்தபாடி, நீா்குந்தி, சின்னம்பள்ளி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்தது.
பென்னாகரம் பகுதிகளில் பெய்த மழையினால் தாழ்வான குடியிருப்புப் பகுதி, சாலையோர பகுதி ஆகிய இடங்களில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. தொடா்ந்து பென்னாகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.