தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு வழங்க திமுக கோரிக்கை
By DIN | Published On : 21st August 2021 11:27 PM | Last Updated : 21st August 2021 11:27 PM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு மத்திய அரசு சாா்பில் வீடு வழங்க வேண்டும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத்தின் தலைவா் எம்.வெங்கடேசனிடம், திமுக மருத்துவா் அணி மாவட்ட அமைப்பாளா் என்.சுரேஷ்குமாா் அண்மையில் வழங்கியுள்ள கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், அரசுப் பள்ளிகளில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தேவையான கையுறைகள், காலணிகள், முகக் கவசம், சீருடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையம் சாா்பில் நேரடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு அனைத்து கல்விக் கட்டணங்களையும் அரசு செலுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் அரசு சாா்பில் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.