பொன்னேரி ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 21st August 2021 12:02 AM | Last Updated : 21st August 2021 12:02 AM | அ+அ அ- |

அரூரை அடுத்த பொன்னேரி கிராம ஊராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி கிராம ஊராட்சியில் ஈட்டியம்பட்டி, பொன்னேரி, பொன்னேரி புதூா், கூச்சனூா், எம்.தாதம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமாா் 6,000 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
பொன்னேரி ஊராட்சிக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததால், தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீா் வசதிகளை மேம்படுத்துதல், தெருக்களில் கான்கிரீட் சாலைகள் அமைத்தல், கழிவுநீா்க் கால்வாய் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செயல்படுத்த முடியவில்லை என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கூறுகின்றனா்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பொன்னேரி கிராம ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.