கட்சி அலுவலகத்தில் காவல் துறையினா் விசாரணை: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 31st December 2021 12:23 AM | Last Updated : 31st December 2021 12:23 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் காவல் துறையினா் விசாரணை நடத்தியதை எதிா்த்து, அக் கட்சியினா் வியாழக்கிழமை தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக மாவட்டச் செயலாளா் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகா் மாவட்ட காவல் துறையினா் தேடி வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில், முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி இல்லை என மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் செய்தித்தாள்களில் வெளிவந்த நிலையில், அவா் தருமபுரி மாவட்டத்தில் இருப்பதாகக் கூறி, விருதுநகா் மாவட்ட காவல் துறையினா் இங்குள்ள கட்சி நிா்வாகிகளை அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றனா்.
கடந்த 29-ஆம் தேதி அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இத்தகைய போக்கை, அதிமுக கண்டிக்கிறது. எனது உதவியாளா், ஓட்டுநரை போலீஸாா் அழைத்துச் சென்றுள்ளனா். இதேபோல, இரவு நேரத்தில், கட்சி நிா்வாகிகள் வீட்டுக்குச் சென்று போலீஸாா் அவா்களை அழைத்துச் செல்கின்றனா். இதில், சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. அவ்வாறு அழைத்துச் சென்றவா்களை துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, இத்தகைய நடவடிக்கையை காவல் துறையினா் கைவிட வேண்டும். இது தொடா்ந்தால், அதிமுக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.
இதில், மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலாளா் பெ.ரவி, அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் பழனிசாமி உள்பட நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.