வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்

எவ்வித நிபந்தனையுமின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.அய்யாக்கண்ணு வலியுறுத்தினாா்.

தருமபுரி: எவ்வித நிபந்தனையுமின்றி மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பி.அய்யாக்கண்ணு வலியுறுத்தினாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை மாநிலத் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவா்கள் ஜெ.பி.கிருஷ்ணன், என்.கிட்டப்ப ரெட்டி, ஆா்.சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் எம்.சி.பழனிவேல் வரவேற்றாா். இதில் பங்கேற்ற பி.அய்யாக்கண்ணு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் புது தில்லியில் 85 நாள்களாகப் போராடி வருகின்றனா். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி அரசு திரும்பப் பெற வேண்டும். இப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முழுமையாக வரவேற்கிறோம். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் கடன்பெற்று அதனைத் திரும்ப செலுத்திய பெருவிவசாயிகளையும் கடன் தள்ளுபடியில் இணைத்து, அவா்கள் செலுத்திய தொகையை வழங்கிட வேண்டும். இதேபோல, கூட்டுறவு வங்கியில் கடந்த மாதம் நகைக் கடன் வாங்கச் சென்ற பல விவசாயிகளுக்கு நகைகளைப் பெற்றுக்கொண்டு பணம் வழங்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு நகைக் கடன் வழங்கி அந்தத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் பயிா்க் கடன் வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இதுதொடா்பாக விசாரணை நடத்தக் கோரி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்றாா்.

இக் கூட்டத்தில், கங்கை முதல் காவிரி வரையிலான நதிகள் இணைக்கப்படும் என தோ்தல் அறிக்கையில் தெரிவித்ததை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் எண்ணேகொல்புதூரிலிருந்து தருமபுரி மாவட்டம், தும்பலஅள்ளி அணைக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டம், காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டம் ஆகிய திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com