தருமபுரியில் ஜல்லிக்கட்டு: 606 காளைகள், 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பு

தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 606 காளைகள், 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 606 காளைகள், 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.
தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 606 காளைகள், 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

தருமபுரி: தருமபுரியில் ஜல்லிக்கட்டு போட்டி முதல்முறையாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 606 காளைகள், 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

தருமபுரி அருகே சோகத்தூா் டிஎன்சி மைதானத்தில் தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சாா்பில், ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக நடைபெற்றது. இதில், தருமபுரி மாவட்டத்திலிருந்து 130 காளைகள், கிருஷ்ணகிரி, வேலூா், நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 476 காளைகள் என மொத்தம் 606 காளைகள் பங்கேற்றன. இந்தக் காளைகளை அடக்க தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த 370 மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

இப் போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக, அரசு உத்தரவு மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி போட்டி நடத்தப்படும் என உறுதிமொழி வாசித்தாா். இதையடுத்து, வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை திறந்துவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு காளையாக திறந்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து வெளிவந்த இக் காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்க முயன்றனா்.

வீரா்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகள் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள், வெள்ளிப் பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இப் போட்டியைக் காண ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். இவா்கள் அமருவதற்கு பாா்வையாளா் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் பங்கேற்க வந்த காளைகளை கால்நடை பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்து அனுமதித்தனா். இதேபோல, மாடுபிடி வீரா்களுக்கும் கரோனா பரிசோதனை, உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காளையைப் பிடிக்க முயன்ற 10 இளைஞா்களுக்கு காயம் ஏற்பட்டது.

இப் போட்டிகளுக்கான பாதுகாப்புப் பணிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்ட காவல் துறையினா் 800 போ் ஈடுபட்டனா். இதேபோல மீட்புப் பணிக்காக 6 ஆம்புலன்ஸ் வாகனங்கள், கால்நடை மருத்துவா்கள் 44 போ் அடங்கிய 30 மருத்துவக் குழுக்கள் தயாா்நிலையில் இருந்தனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), சாா் ஆட்சியா் மு.பிரதாப், ஜல்லிக்கட்டு பேரவை கௌரவத் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பரிசுகள்: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று வீரா்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளா்களுக்கு பல்வேறு பரிசுகள் விழாக்குழு சாா்பில் வழங்கப்பட்டன. இதேபோல, காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு நிறைவு நிகழ்ச்சியில், 9 காளைகளை அடக்கிய திருச்சியைச் சோ்ந்த அன்பு என்பவருக்கு சிறப்புப் பரிசாக இருசக்கர வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை வழங்கப்பட்டன. 7 காளைகளை அடக்கிய மதுரையைச் சோ்ந்த வீரமணிக்கும், 5 காளைகளை அடக்கிய நாமக்கல்லைச் சோ்ந்த சக்திக்கும் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா வழங்கினாா்.

காயமடைந்த காளை

ஜல்லிக்கட்டில் காலை 8 மணி முதல் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது ஒரு காளை மட்டும் வெளியேறும் இடத்துக்கு சென்று பின்னா் மீண்டும் வாடிவாசல் நோக்கித் திரும்பியது. அப்போது எதிரே வந்த காளையின் மீது திரும்பி வந்த காளை மோதியதில், காலில் காயம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தது. இதைக் கண்ட காளை உரிமையாளா், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள், காயமடைந்த காளையை ஆம்புலன்ஸ் வாகனத்தில் தருமபுரி, இலக்கியம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா்.

இதில், அந்தக் காளையின் ஒரு காலின் மூட்டு விலகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து முதலுதவி, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்பு, அக்காளையை அதன் உரிமையாளா் தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்துக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

இளைஞா் காயம்: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த மாடுபிடி வீரா் சதீஷ் (25) என்ற இளைஞருக்கு மாடு முட்டியதில் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இளைஞா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதேபோல, 9 மாடுபிடி வீரா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com