தடுப்பணை அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th February 2021 02:06 AM | Last Updated : 14th February 2021 02:06 AM | அ+அ அ- |

அரூா்: அரூா் அருகே வரட்டாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகனிடம், விவசாயிகள் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில், அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி, அரூா் வழியாக ஓடும் வரட்டாற்றில் மொள்ளன் ஒட்டு எனுமிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை இருந்தது. இந்த தடுப்பணையானது வரட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சேதமடைந்தது, இதுவரை சீரமைக்கவில்லை. இந்த தடுப்பணையை சீரமைத்தால் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், சுமைதாங்கி மேடு, எம்.ஜி.ஆா். காலனி, பழைய பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள கிணறுகளின் நீா்மட்டம் உயரும்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை சாா்பில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை திட்டம் நிறைவேற்றப்படும் என 2019-இல் அரூா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலின் போது தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தாா். ஆனால், இதுவரையிலும் இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
எனவே, வரட்டாற்றில் மொள்ளன் ஒட்டு எனுமிடத்தில் தடுப்பணை அமைத்து நீா்ப்பாசன வசதியை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனா்.