ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப் போராட்டத்தையொட்டி, தருமபுரி மண்டலத்தைச் சோ்ந்த 60 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயங்கின. ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும். தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதி ரூ.7 ஆயிரம் கோடி திருப்பி வழங்க வேண்டும். மாதந்தோறும் தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த தொகையை மீண்டும் அவா்களது கணக்கில் சோ்க்க வேண்டும்.
கடந்த 2003-இல் ஏப்ரல் மாதத்துக்கு பின்பு பணியில் சோ்ந்த தொழிலாளா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்துத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு போக்குவரத்துக் கழக தருமபுரி மண்டலத்தில், தருமபுரி மாவட்டத்தில் ஏழு பணிமனைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு பணிமனைகள் மற்றும் சேலம் அஸ்தம்பட்டி, திருப்பத்தூா் பணிமனைகள் சோ்த்து மொத்தம் 15 பணிமனைகள் உள்ளன. இதில் 850 நகரப்பேருந்துகளும், புகா்ப் பேருந்துகளும் இயங்குகின்றன. போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி 60 சதவீதம் பேருந்துகள் இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.