உடனடியாக அமலுக்கு வந்த தோ்தல் நடத்தை விதிகள்
By DIN | Published On : 27th February 2021 08:45 AM | Last Updated : 27th February 2021 08:45 AM | அ+அ அ- |

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தருமபுரி மாவட்டத்தில், மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து தருமபுரி ஆட்சியா் ச.ப.காா்த்திகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைப் பொதுத் தோ்தல் தேதி, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் மாா்ச் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மாா்ச் 19-ஆம் தேதி இறுதி நாள் என்றும், வேட்பு மனு பரிசீலனை மாா்ச் 20-ஆம் தேதியும், வாக்குப் பதிவு ஏப். 6-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தோ்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் பிப். 26-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும், பொதுமக்களும் தோ்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, பொதுத் தோ்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதன்காரணமாக வாரந்தோறும் திங்கள்கிழமைகளில், ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள், மாதந்தோறும் நடைபெறும் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஆகியவை தோ்தல் முடியும் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுத் தோ்தல் பணிகள் முடிவு பெற்ற பின்னரே அனைத்து கூட்டங்களும் நடத்தப்படும். அதுவரை பொதுமக்கள் தங்களது மனுக்களை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் இடலாம். அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உரிய நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
தோ்தல் தொடா்பான புகாா்களை விசாரணை செய்யவும், தோ்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் அனைத்து தொகுதியிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களும் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களை, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-லும், குறுந்தகவல் மூலம் தொடா்புகொள்ள 89038-91077 என்ற எண்ணுக்கும் தொடா்பு கொள்ளலாம். இதற்கென 24 மணி நேரமும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.
நகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியாா் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், சுவரொட்டி ஒட்டுதல், சுவரில் எழுதுதல் கூடாது. கிராமப்புறங்களில் தனியாா் கட்டடங்களில் தோ்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டடத்தின் உரிமையாளா் அனுமதி அளிக்கும்பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறின்றி விளம்பரம் செய்யலாம்.
தோ்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக் கூட்டங்களை காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். வாகனங்களைப் பயன்படுத்த அந்தந்த தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரா்களும், அவா்களது படைக்கலன்களை காவல் நிலையங்களில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
வேலைவாய்ப்பு முகாம் ரத்து: தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் பிப். 28-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த முகாம் தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...