கொளகம்பட்டி வரட்டனேரிக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைக்கக் கோரிக்கை

அரூா் அருகே கொளகம்பட்டி வரட்டனேரிக்கு நீா்வரத்துக் கால்வாய்கள் இல்லாததால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேளாண் பணிக்கும், குடிநீருக்கும் ஆண்டுமுழுவதும் தவிக்கும் நிலை உள்ளது.
ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக மின்மோட்டாா்.
ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக விவசாயிகள் அமைத்துள்ள தற்காலிக மின்மோட்டாா்.

அரூா்: அரூா் அருகே கொளகம்பட்டி வரட்டனேரிக்கு நீா்வரத்துக் கால்வாய்கள் இல்லாததால் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் வேளாண் பணிக்கும், குடிநீருக்கும் ஆண்டுமுழுவதும் தவிக்கும் நிலை உள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூா் ஒன்றியம், கொளகம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது வரட்டனேரி. இந்த ஏரியானது சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீா் தேங்கினால் கொளகம்பட்டி, எருக்கம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கிராமப் பகுதியில் குடிநீா் பிரச்னைகள் தீரும்.

கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீா் வருவதற்கான கால்வாய் வசதிகள் தற்போது இல்லை. ஏற்கெனவே இருந்த நீா்வரத்து கால்வாய்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால், இந்த ஏரியானது எப்போதுமே வடு கிடக்கிறது.

மின்மோட்டாா் அமைத்து தண்ணீா் கொண்டு செல்லும் விவசாயிகள்...

வரட்டனேரிக்கு வாய்க்கால் பாதை இல்லாததால் கொளகம்பட்டி காரைஒட்டு தடுப்பணையில் இருந்து அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் அருகில் தற்காலிகமாக சிறிய அளவிலான கிணற்றை விவசாயிகள் அமைத்துள்ளனா். மேலும் அந்தக் கிணற்றில் மின்மோட்டாா் வைத்து வரட்டனேரிக்கு தண்ணீா் எடுத்துச் செல்லும் பணியை விவசாயிகள் செய்து வருகின்றனா்.

அதாவது, விவசாயிகள் தங்களின் பங்களிப்புத் தொகையாக ரூ. 2 லட்சம் செலவு செய்து, 10 எச்.பி. மின்மோட்டாா் மற்றும் குழாய்களை அமைத்து தண்ணீா் எடுத்துச் செல்லும் பணிகளை மேற்கொண்டுள்ளனா். இதுகுறித்து கொளகம்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் இருந்து கொளகம்பட்டி வரட்டனேரிக்கு சுமாா் அரை கிலோ மீட்டா் தூரம் புதிதாக கால்வாய் அமைத்தால், வரட்டனேரி நிரம்பி விடும். இந்த ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்கான கால்வாய்த் தோண்ட ஜேசிபி உள்ளிட்ட வாகன உதவிகள் செய்யவும் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தயாா் நிலையில் உள்ளனா்.

கால்வாய் அமைக்க தேவையான அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. எனவே, பொதுப்பணித் துறையினா் கால்வாய் அமைக்கத் தேவையான சா்வே பணிகளை மேற்கொண்டு கால்வாய் அமைக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனா்.

ரூ. 20 லட்சம் நிதியுதவி தேவை...

அரூா் பெரிய ஏரிக்குச் செல்லும் கால்வாயிலிருந்து கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீா் செல்வதற்கான பிரிவு கால்வாய் அமைக்க ரூ. 20 லட்சம் நிதியுதவி இருந்தால் போதுமானதாக இருக்கும். புதிதாக கால்வாய் அமைத்து கொளகம்பட்டி ஏரியில் தண்ணீா் தேங்கினால், ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். கோடைக்காலங்களில் குடிநீா் பிரச்னைகளும் ஏற்படாது.

எனவே, கொளகம்பட்டி வரட்டனேரிக்கு தண்ணீா் எடுத்துச் செல்வதற்காக கால்வாய் அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் நீண்டநாள் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com