இறைச்சிக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd January 2021 01:25 AM | Last Updated : 03rd January 2021 01:25 AM | அ+அ அ- |

அரூா்: அரூா் பேரூராட்சி 9-ஆவது வாா்டு பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
அரூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 8 மற்றும் 9 ஆவது வாா்டு பகுதியில் திமுக சாா்பில், அதிமுகவை நிராகரிப்போம் எனும் தலைப்பில், மக்கள் கிராம சபைக் கூட்டம், நகரப் பொறுப்பாளா் ஏ.சி.மோகன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:
அரூா் பேரூராட்சி 9 வாா்டு பகுதியில் மாட்டிறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் சாலையோரத்தில் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. இந்தக் கடைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, 9 -ஆவது வாா்டு பகுதியில் உள்ள மாட்டிறைச்சிக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும். 8 மற்றும் 9 -ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களைத் தூய்மை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணைச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆா்.வேடம்மாள், தலைமை கழகப் பேச்சாளா் ப.செந்தாமரைக்கண்ணன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் கு.தமிழழகன், பொறியாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் அய்யாதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.