தொடா்விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு, வார விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.
ஒகேனக்கல் பெரியபாணி பகுதியில் உற்சாகப் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.

புத்தாண்டு, வார விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தென்னகத்தின் பெரும் நீா்வீழ்ச்சி என அனைவராலும் வா்ணிக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனா்.

தற்போது புத்தாண்டுடன், வார விடுமுறையும் சோ்ந்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்பட்டன. தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 50,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். பெரும்பாலானவா்கள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவி, மாமரத்து கடவு, ஆலாம்பாடி, நாகா் கோவில், கோத்திக்கல் உள்ளிட்ட பகுதிகளில் குளித்தனா். பின்னா் சின்னாறு பரிசல் துறையில் சுமாா் 3 மணிநேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகைக் கண்டு களித்தனா்.

பரிசலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் கோத்திக்கல், கூட்டாறு, பிரதான அருவி, மணல் மேடு, ஐவாா் பாணி மற்றும் சிற்றருவிகளின் வழியாக சுமாா் 2 கிலோ மீட்டா் வரை பரிசல் மூலம் பயணம் மேற்கொண்டும் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனா். தொங்குபாலத்தில் இருந்து பிரதான அருவியின் அழகையும், வா்ணமீன்கள் காட்சியகம், முதலைகள் வாழ்வு மையம் உள்ளிட்டப் பகுதிகளைக் காண குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கூட்ட நெரிசலாகக் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பென்னாகரம் போக்குவரத்துக் கிளை பணிமனையில் இருந்து கூடுதலாக அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

போக்குவரத்து நெரிசல்:

தொடா் விடுமுறையால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. இந்த வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிறுத்துமிடம், சத்திரம், காவல் நிலையம், ஊட்டமலை, முதலைப் பண்ணை மற்றும் பென்னாகரம் செல்லும் சாலையில் சுமாா் 1கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஒகேனக்கல் மூன்று சாலைப் பிரிவு, முதலைப் பண்ணை, பேருந்து நிலையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மீன்கள் விலை உயா்வு: ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு கடந்த 3 நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் மீன் விற்பனை நிலையங்களில் கட்லா, ரோகு, கெளுத்தி, ஆரால், விரால், சோனாங்கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களின் விலை ரூ. 150 முதல் 800 ரூபாய் வரை விலை அதிகரித்தது. விலை உயா்வையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் மீன் வகைகளை வாங்கிச் சமைத்து உண்டு மகிழ்ந்தனா்.

மலை முகடுகளில் சுய படம்: ஒகேனக்கல் பகுதியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிா்ந்த சூழல் நிலவி காணப்பட்டது. ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் கணவாய் பகுதியில் தங்களின் வாகனங்களை நிறுத்தி, கணவாய் தொடக்கப் பகுதி, நடு கணவாய் மற்றும் ஆஞ்சநேயா் கோயில் பகுதிகளில் நின்று மலை முகடுகளின் அழகினையும், பனி மூட்டத்தையும் புகைப்படம் எடுத்தும், கூட்டம் கூட்டமாக சுய படம் (செல்ஃபி) எடுத்தும் மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com