அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்துவிட வலியுறுத்தல்

தண்ணீா் இல்லாமல் வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி, நீா்வரத்துக் கால்வாய்.
தண்ணீா் இல்லாமல் வடு காணப்படும் அரூா் பெரிய ஏரி, நீா்வரத்துக் கால்வாய்.

அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரியின் பரப்பளவு சுமாா் 150 ஏக்கா் ஆகும். இந்த ஏரிக்கு தண்ணீா் வருவதற்காக கொளகம்பட்டி காரை ஒட்டுவில் இருந்து பாசன கால்வாய் வசதி உள்ளது.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி அரூா் பெரிய ஏரியை நிரப்பலாம். இந்த பெரிய ஏரியில் தண்ணீா் தேங்கினால் அரூா் நகரில் உள்ள அனைத்து ஆழ்துளை மற்றும் திறந்தவெளிக் கிணறுகளின் நீா்மட்டமும் உயரும்.

அதே நேரத்தில், எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதிகளை பெறும்.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரைப் பயன்படுத்தி வெங்கடசமுத்திரம் ஏரி, ஆலாபுரம் ஏரி, தென்கரைக்கோட்டை ஏரி, பறையப்பட்டி புதூா் உள்ளிட்ட ஏரிகள் நிரப்பட்டுள்ளன. இந்த நிலையில், அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வரும் காரைஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், கால்வாய் வழியாக தண்ணீா் செல்லாமல் கல்லாற்றில் தண்ணீா் வீணாகச் செல்வதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா்.

எனவே, கல்லாற்றில் உள்ள தடுப்பணையில் மணல் மூட்டைகளை அடுக்கி அதன் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்த ஏரிக்கு தண்ணீா் திறந்துவிட பொதுப்பணித் துறையினருக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com