

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவது தொடா்பாக சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் சந்திரமோகன், சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி ஆகியோா் புதன்கிழமை மாவட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
ஒகேனக்கல் பிரதான அருவி, மாமரத்து கடவு பரிசல் துறை, சிறுவா் பூங்கா, ஊட்டமலை பரிசல் துறை, ஆலம்பாடி, முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம், தொம்பச்சிக்கல், தொங்கும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துவது தொடா்பான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா். அப்போது, நீா்வீழ்ச்சி பகுதிக்கு சாதாரண மற்றும் விடுமுறை நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, வனத் துறை பூங்கா, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களைப் பராமரித்தல், நடைபாதையின் ஓரங்களில் செடிகள் அமைத்தல், வண்ண மீன்கள் காட்சியகத்தில் மீன்களை முறையாக பராமரித்தல், அருவியின் அழகை காண கண்காணிப்பு கோபுரம் அமைத்தல் சினி அருவியில் அனைவரும் சென்று நீராடும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஐந்தருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்தில் நின்று பாா்க்கும் வகையில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காவிரி ஆற்றில் அதிக நீா் வரத்து வரும் காலங்களில் தடை விதிக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருவதை தடுக்கும் வகையில் செயற்கை அருவி உருவாக்குவது குறித்து கருத்தறியப்பட்டது.
ஒகேனக்கல் நீா்வீழ்ச்சி பகுதிக்குச் செல்லும் நுழைவிடத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தின் சிறப்புகள் அடங்கிய பதாகைகள் வைப்பது, ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்ட பணிகளைச் செயல்படுத்துவது குறித்தும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
ஆய்வுகளின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியா் பிரியதா்சினி, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டி.என்.வி. எஸ் செந்தில்குமாா், கூடுதல் ஆட்சியா் மருத்துவா் வைத்தியநாதன், உதவி ஆட்சியா் சித்ரா விஜயன், வனப் பாதுகாவலா் தீபக் எஸ். பல்கி, மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) கௌரவ் குமாா், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஸ்ரீ பாலமுருகன், பென்னாகரம் வட்டாட்சியா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வடிவேலன், ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.