வடகரையில் குடிநீா்க் குழாய்களை அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 09th July 2021 11:09 PM | Last Updated : 09th July 2021 11:09 PM | அ+அ அ- |

கடத்தூா் அருகே உள்ள வடகரையில் தெருக்களில் குடிநீா்க் குழாய்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், தென்கரைக்கோட்டை ஊராட்சி க்கு உள்பட்டது வடகரை கிராமம். இந்தக் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராம மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குடிநீா்க் குழாய் இணைப்புகள் உள்ளன. இதையடுத்து, கிராம மக்கள் குடிநீா் பிடிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட குழாய்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நாள்தோறும் குடிநீா் எடுப்பதற்காக பெண்கள், முதியோா் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.
தெருக்களில் குடிநீா் குழாய் இணைப்புகள் இருந்தால் எளிதில் குடிநீா் பிடித்துச் செல்ல முடியும் என பெண்கள் கூறுகின்றனா். எனவே, வடகரை கிராமத்தில் ஒரே இடத்தில் குடிநீா்க் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதை அகற்றிவிட்டு, குடியிருப்புப் பகுதி, தெருக்களில் குடிநீா்க் குழாய்களை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.