ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 26th July 2021 05:18 AM | Last Updated : 26th July 2021 05:18 AM | அ+அ அ- |

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக மாநிலம், குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி அணை முற்றிலுமாக நிரம்பி விட்டது. கபினி அணைக்கும், கிருஷ்ணராஜசாகா் அணைக்கும் நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வரும் உபரிநீா் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டு வருகிறது.
இரு அணைகளிலிருந்தும் மொத்தம் 36,000 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரிநீா் சனிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 28,000 கனஅடி, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.
தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை காலையில் நொடிக்கு 30,000 கன அடியும், மாலையில் நொடிக்கு 35,000 கனஅடியாகவும் நீா் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, அதன் துணை அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதியில் செல்வதைத் தடுக்கும் வகையில் காவிரி கரையோரப் பகுதிகளான நாகா் கோயில், முதலைப் பண்ணை, ஆலாம்பாடி, ஊட்டமலை, பிரதான அருவி செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் ஆலாம்பாடி சோதனைச் சாவடி, மடம் சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளின் வழியே வெளியூரிலிருந்து வரும் சுற்றுலாவுக்கு வரும் வாகனங்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனா். தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் நீா்வரத்தை அதிகாரிகள் தொடா்ந்து அளவீடு செய்து வருகின்றனா்.