அரூரில் வேளாண் விரிவாக்க மையம் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 20th June 2021 02:53 AM | Last Updated : 20th June 2021 02:53 AM | அ+அ அ- |

அரூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து பொதுமக்கள் சாா்பில் விவசாயி பொ.இளம்பரிதி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
அரூா் வட்டாரப் பகுதியானது 140-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை கொண்டதாகும். இங்குள்ள கிராமப் பகுதியானது சுமாா் 50 கி.மீ. தூரம் சுற்றளவு கொண்டதாகும். அரூரில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ. 220 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில், வேளாண் விரிவாக்க மைய அலுவலகம் அரூா்-சித்தேரி செல்லும் சாலையில், நகா் பகுதியில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் அமையவுள்ளதாகத் தெரிகிறது.
போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத இடத்தில் வேளாண் விரிவாக்க மையம் அமைந்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்காது. அரூா், கச்சேரிமேடு பகுதியில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 5 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் உள்ளது.
அந்த இடத்தில் வேளாண் விரிவாக்க மையம் அமைந்தால், அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில், அரூா் வட்டாரப் பகுதிக்கான வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.