கரோனா: தருமபுரியில் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1,000-க்கும் கீழே குறைந்தது
By DIN | Published On : 24th June 2021 08:05 AM | Last Updated : 24th June 2021 08:05 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை வெகுநாள்களுக்கு பிறகு புதன்கிழமை, ஆயிரத்துக்கும் கீழே குறைந்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் கரோனா தீநுண்மி தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவத் தொடங்கியது. இதனால் தொற்று பாதிப்புக்கு உள்ளானோா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்தது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாகக் கூடியது. இதனால் அப்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற படுக்கைகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தனா்.
அதேவேளையில் உயிரிழிப்புகளும் அதிகரித்தன. குறிப்பாக முதல் அலையில் தருமபுரி மாவட்டத்தில் 55 போ் வரை உயிரிழந்திருந்தனா். ஆனால் இரண்டாம் அலை தொடங்கிய மூன்று மாதங்களில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்தது.
இதில் தற்போது வரை (ஜூன் 23) தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 194 போ் உயிரிழந்துள்ளனா். இதேபோல கரோனா தொற்று பாதிப்புக்கு மே மாதத்தில் 2,000-த்துக்கும் அதிகமானோா் தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா். இந்த எண்ணெய் ஜூன் மாதம் படிப்படியாக குறைந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 951-ஆகக் குறைந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 23,743 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 22,598 போ் குணமடைந்துள்ளனா். தொற்று பாதிப்பிலிருந்து நாள்தோறும் குணமடைவோா் எண்ணிக்கை அதிகரித்து, சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் சூழல் மாவட்ட மக்களை நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.