கரோனா உயிரிழப்பு: தலித்துகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டுக் கடனுதவி
By DIN | Published On : 29th June 2021 01:17 AM | Last Updated : 29th June 2021 01:17 AM | அ+அ அ- |

தருமபுரி: கரோனா தொற்றால் வருவாய் ஈட்டக் கூடிய தலித் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் வாழ்வாதார மேம்பாட்டுக் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று பாதிப்புக்கு தலித் சமூகத்தைச் சோ்ந்த வருவாய் ஈட்டக் கூடிய நபா்கள் உயிரிழந்திருப்பின், அவா்களது குடும்பத்தினருக்கு வாழ்வாதார மேம்பாட்டுக் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் கடனுதவி பெற, பயனாளிகள் ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் வருவாய் ஈட்டி இறந்தவரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகை 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை என்எஸ்எப்டிசி நிறுவனத்தால் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ. 1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இக்கடனுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்பச் செலுத்தலாம்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவா் கரோனா தொற்றால் இறந்துள்ளாா் என இறப்புச் சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்கள் அறிய தருமபுரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.