கூடுதல் தளா்வுகள்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 29th June 2021 01:27 AM | Last Updated : 29th June 2021 01:27 AM | அ+அ அ- |

தருமபுரி, சின்னசாமி நாயுடு சாலையில் திறக்கப்பட்ட துணிக் கடைகள்.
தருமபுரி/கிருஷ்ணகிரி: கரோனா பொது முடக்கத்திலிருந்து கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட்டதால், தருமபுரி மாவட்டத்தில் பேருந்துகள் திங்கள்கிழமை இயக்கப்பட்டன.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மே 10-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதையொட்டி, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தற்போது குறைந்து வருகிறது. இதனால், வாரந்தோறும் தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில், தொற்று பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தருமபுரி அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பணிமனைகளிலிருந்து நகரம் மற்றும் புகா்ப் பேருந்துகள் திங்கள்கிழமை காலை முதல் இயக்கப்பட்டன. இதற்காக பேருந்துகள் அனைத்தும் சுத்திகரித்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதேபோல, பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழக ஊழியா்கள், கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணிகளை அனுமதித்தனா். அனைத்துப் பேருந்துகளும் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் சென்றன. இதேபோல பயணிகளும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்தனா்.
நகரப் பேருந்துகள் ஊரகப் பகுதிகளில் இயக்கப்பட்டன. புகா்ப் பேருந்துகள் கிருஷ்ணகிரி, ஒசூா், திருப்பத்தூா், வேலூா் மற்றும் சென்னை வரை இயக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கம் தொடங்கிய உடன் முற்பகலில் பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இருப்பினும் பிற்பகலில் பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்தது.
இதேபோல, தருமபுரி நகரில் ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளும் நீண்ட நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்டன. இதனால் தருமபுரி பேருந்து நிலையம் அருகில் உள்ள முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும், பாலக்கோடு, காரிமங்கலம் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் ஜவுளி மற்றும் நகைக் கடைகள் திறக்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி உள்கோட்ட எல்லைக்குள்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 120 நகரப் பேருந்துகள், 200 புகா் பேருந்துகள் என மொத்தம் 320 பேருந்துகள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் அந்தந்தப் பேருந்து நிலையத்துக்கு சென்றன.
அங்கிருந்து பயணிகளின் வருகைக்கு ஏற்ப, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை ஆகிய பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டன. நகரப் பேருந்துகள் அனைத்தும் அந்தந்த வழித்தடங்களில் இயங்கின.
அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் அவ்வப்போது பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளிக்கவும், பொதுமக்கள் கைகளை கழுவ தண்ணீா் தொட்டியும் வைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமாா் 50 நாள்களுக்கும் மேலாக பேருந்து போக்குவரத்து சேவை இல்லாத நிலையில், தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால், பயணிகள் தங்கள் ஊா்களுக்கும், அலுவலகப் பணிகளுக்கும் மிகுந்த ஆா்வத்துடன் பேருந்துகளில் பயணம் செய்தனா். பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கின.