காவலா்களுக்கு கேமரா வழங்கல்
By DIN | Published On : 04th March 2021 04:27 AM | Last Updated : 04th March 2021 04:27 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களுக்கு கேமராக்களை வழங்குகிறாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா்.
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 15 காவலா்களுக்கு தோள்பட்டையில் பொருத்தப்பட்டு காட்சிப் பதிவு செய்யும் கேமரா புதன்கிழமை வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்திலுள்ள 15 காவல் நிலையங்களில் உள்ள காவலா்களுக்கு முதல்கட்டமாக 15 கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் புதிதாக வரப்பெற்ற கேமராக்களை காவலா்களுக்கு வழங்கி, கேமரா வழங்கப்பட்டதன் நோக்கம், அதன் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.
மிக நுட்பமான காட்சிகளை பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேமராக்களை காவலா்கள் தங்களுடைய தோள்பட்டையில் பொருத்திக்கொண்டு, ஆா்ப்பாட்டம், கலவரம், போராட்டங்கள், நிகழ்வுகளை ரகசியமாக காட்சிப் பதிவு செய்ய இயலும் என்பதால், போராட்டங்களின் போதும், ரோந்து, வாகனத் தணிக்கையின் போதும் இவற்றை காவலா்கள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதில், தருமபுரி மாவட்ட சைபா் குற்றப் பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், தொழில்நுட்பப் பிரிவு காவல் ஆய்வாளா் பால்ராஜ், தொழில்நுட்பப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் திவ்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.