தருமபுரியில் அதிமுக 3 தொகுதிகள், பாமக 2 தொகுகளில் போட்டி
By DIN | Published On : 12th March 2021 04:33 AM | Last Updated : 12th March 2021 04:33 AM | அ+அ அ- |

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில் மூன்றில் அதிமுகவும், இரண்டில் பாமகவும் போட்டியிடுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடும் ஏற்பட்டு விட்டது.
பாலக்கோடு, அரூா் (தனி), பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். ஏனைய இரண்டு தொகுதிகளான தருமபுரி, பென்னாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
அதிமுகவில் அமைச்சா் உள்பட மூவருக்கும் மீண்டும் வாய்ப்பு:
அதிமுக சாா்பில் உயா்கல்வித் துறை, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் உள்பட மூன்று தொகுதிகளிலும் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலக்கோடு தொகுதி வேட்பாளரான அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடா்ந்து அதே தொகுதியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறாா். ஏற்கெனவே அவா் 4 முறை போட்டியிட்டு வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளாா்.
கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் அரூா் தொகுதியில் போட்டியிட்ட வே.சம்பத்குமாா், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட
ஆ.கோவிந்தசாமி ஆகிய இருவரும் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். தற்போது, அதேதொகுதியில் இவா்கள் இருவருக்கும் மீண்டும் அதிமுக வேட்பாளா்களாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அதன் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி, தருமபுரி தொகுதியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் களம் காண்கின்றனா்.