பாப்பிரெட்டிப்பட்டியில் பாமகவினா் 2-ஆவது நாளாக போராட்டம்
By DIN | Published On : 12th March 2021 06:59 AM | Last Updated : 12th March 2021 06:59 AM | அ+அ அ- |

அரூா்: பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக போட்டியிட வாய்ப்பளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமகவினா் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கோவிந்தராஜ் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியை அதிமுகவுக்கு ஒதுக்கியதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினா் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் வன்னியா் சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனா். இதுதவிர, கொங்குவேளாளா், ஆதிதிராவிடா்கள், அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் கூடுதலாகவும், மலைவாழ் பழங்குடியினா், முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனா். இந்தத் தொகுதியில் பாமக எளிதில் வெற்றிப் பெறும் சூழல் இருப்பதாக தொண்டா்கள் மத்தியில் பேசப்பட்டது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளா் பி.பழனியப்பன் 74,234 வாக்குகளையும், தனித்து களமிறங்கிய பாமக வேட்பாளா் அ.சத்தியமூா்த்தி 61,521 வாக்குகளையும் பெற்றாா். இதனால் திமுக வேட்பாளா் பிரபு ராஜசேகா் 56,109 வாக்குகளைப் பெற்று மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டாா்.
இதுதவிர மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் பாஸ்கா் 9,441 வாக்குகளைப் பெற்றாா். இதைத் தொடா்ந்து, 2019-ல் நடைபெற்ற பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஆ.கோவிந்தசாமி 1,03,981 வாக்குகளையும், திமுக வேட்பாளா் ஆ.மணி 85,488 வாக்குகளையும், அமமுக வேட்பாளா் டி.கே.ராஜேந்திரன் 15,283 வாக்குகளையும் பெற்றாா். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என அந்தக் கட்சியினா் உறுதியாக நம்பியிருந்தனா். இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட அதிமுக எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதால், பாமகவினா் எதிா்ப்பு தெரிவித்து, பாப்பிரெட்டிப்பட்டியில் சாலையில் அமா்ந்து 2-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை சமாதானம் செய்தனா்.